ஞாயிறு, 1 மார்ச், 2009

கொண்டல்ராஜ் - கலைஞனின் அறிமுகம்

உண்மையான ஓவியம் என்பது கடவுளின் படைப்பின் நிழலாகும் - மைக்கேல் ஏசலோ.

கொண்டல்ராஜ் - கடவுளின் படைப்பின் நிழலை வெளிக்கொணர உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு உண்மையான ஓவியராவார், ஓய்வில்லாத உழைப்பினால் தனது எண்ணங்களை செழுமையான ஓவியங்கள் மூலம் பிரதிபலித்துக் கொண்டிருப்பவர்.
விக்டோரியா தொழில்நுட்ப கழகத்தின் மகாத்மா காந்தி விருதைப் பெற்றவரும் தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியருமான எஸ்.எஸ்.மணியனின் பிரதான சீடர். இதன்வழி, இந்தியாவின் புகழ்பெற்ற ஓவிய மரபினை கற்றுத்தெளிந்தவர், ஓவியத்தின் பல்வகையிலும் கைதேர்ந்தவராகத் திகழ்கிறார்.
குருகுல வழியில் தனது குருவான எஸ்.எஸ்.மணியனுடன் 1993 முதல் தங்கியிருந்து ஓவியத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் கற்றுத் தெளிந்தார்.
இவரது ஓவியங்களை இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாதமியில் கண்காட்சிக்கு வைத்துள்ளார். லலித் கலா அகாதமியில் (இந்திய அரசினால் கலைகளை வளர்க்க நிறுவப்பட்டது) இவரது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. விக்டோரியா தொழில்நுட்பக் கழகத்தில் மகாத்மா காந்தி நினைவுநாள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. வினயசா ஆர்ட் கேலரியிலும் இவரது படைப்புக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பலராலும் பாராட்டுகுள்ளானது.
அரிமா சங்கத்தினரால் 2000 வது ஆண்டு கொடைக்கானலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இவரது குருவோடு இணைந்து ஒரே நாளில் 100 போர்ட்ரெய்ட் ஓவியங்களைப் படைத்து சாதனை புரிந்தனர்.
இவரது, எண்ணற்ற போர்ட்ரெய்ட் ஓவியங்கள் பலவிடத்தும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. (உயிரோட்டமுள்ள போர்ட்ரெய்ட் ஓவியங்கள் எனபது ஓவியரின் முகமே தவிர, வரையப்பட்டவரின் முகமன்று - ஆஸ்கர் ஒயில்ட்).
இவர் வரைந்துள்ள இயற்கை காட்சி ஓவியங்கள், இயற்கையினை அதன் அழகியலோடு வெளிப்படுத்துவனவாகவும் காண்போரை வியக்கும் விதத்திலும் உள்ளன. கிராமங்களின் இயற்கையோடு கொண்ட இவரது ஈடுபாட்டின் மூலம் இவரால் பல்வேறு கிராமப்புற காட்சிகள் ஓவியங்களாக்கப்பட்டுள்ளன.
இவரது படைப்புக்கள், கிராமத்து வாசனையோடும், பாரம்பரிய அழகியலையும் வண்ணமயமான தோற்றத்தையும் கொண்டுள்ளன.
கொண்டல்ராஜ் அவர்கள் சென்னையில் நடைபெறும் பல்வேறு கோடைகால பயிற்சி முகாம்களில் பயிற்சி அளித்துள்ளார்கள்.
தற்போது கொண்டல்ராஜ் அவர்கள் குவைத் எண்ணை நிறுவனத்தில் (KOC) ஓவியராக பணிபுரிகிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு குவைத்தில் ஓவியப்பயிற்சி அளித்து வருகிறார்கள்.
கொண்டல்ராஜ் அவர்கள் கலை விரும்பிகளாலும் அறிஞர்களாலும் பெரும் பாராட்டிற்கும் போற்றுதலுக்கும் தகுதியானவர் என்றால் அது மிகையில்லை.
---முத்துக்கிருஷ்ணன்

2 கருத்துகள்: